ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத் நகரில் ஐந்தாவது லீப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 243-5 ரன்கள் குவித்து அசத்தியது.
இதன் வாயிலாக அகமதாபாத் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையையும் பஞ்சாப் உடைத்தது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு இங்கு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 224-4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த அணிக்கு பிரப்சிம்ரன் ஷிங் 5, ஓமர்சாய் 16, மேக்ஸ்வெல் 0, ஸ்டோனிஸ் 20 ரன்களில் அவுட்டானார்கள்.
சுயநலமற்ற ஸ்ரேயாஸ்:
ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா 47 (23) ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 பௌண்டரி 9 சிக்சருடன் 97* (42) ரன்கள் குவித்து அட்டகாசமாக விளையாடினார். சொல்லப்போனால் நான்காவது ஓவரில் களமிறங்கிய அவர் 19வது ஓவரின் முடிவில் 97 ரன்கள் குவித்தார்.
அதன் காரணமாக அவர் பஞ்சாப் அணிக்காக தனது முதல் போட்டியிலேயே சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய சசாங் ஷிங் அதிரடியாக விளையாடி சிராஜ் வீசிய 20வது ஓவரை முழுமையாக எதிர்கொண்டு 23 ரன்கள் அடித்து 44* (16) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் ஸ்ரேயாஸ் சதத்தை அடிக்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தாலும் புன்னகை முகத்துடன் வெளியேறினார்.
கேப்டன் ஆதரவு:
இந்நிலையில் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்குங்கள் என்று களமிறங்கிய முதல் பந்திலேயே தம்மிடம் ஸ்ரேயாஸ் சொன்னதாக சசாங் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் இது நல்ல கேமியோ. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை நான் பார்த்தேன். அது எனக்கு இன்னும் அதிக உத்வேகத்தை கொடுத்தது”
“உண்மையாக இருக்க வேண்டுமெனில் என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று ஸ்ரேயாஸ் என்னிடம் முதல் பந்திலயே சொன்னார். அதனால் பந்தைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் ரியாக்ட் செய்தேன். பௌண்டரிகள் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் உறுதியாக இருந்தேன். நான் பேட்டிங் செய்யும் இடத்தில் அசத்துவதற்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு முக்கியம். எனது ஷாட்டுகளை சுதந்திரத்துடன் விளையாட முயற்சிக்கிறேன். அதில் எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனது பலத்துக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன்” எனக் கூறினார்.




