Home Blog Page 300

உலக டேபிள் டென்னிஸ் போட்டி இன்று ஆரம்பம்

உலக டேபிள் டென்னிஸ் ‘ஸ்டார் கன்டென்டர்’ சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் இன்று (27) தொடங்கி 5-ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் ஒலிம்பிக் சாம்பியன்கள் சீனாவின் மா லாங், சென் மெங் மற்றும் இந்தியாவின் சரத் கமல், சத்யன், மணிகா பரத்ரா, ஸ்ரீஜா அகுலா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான சீனாவின் பேன் ஜெங்டோங், பெண்கள் பிரிவின் உலகச் சாம்பியன் வாங் மன்யு, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சன் யிங் ஷா (சீனா), தோமோகாஜூ ஹரிமோட்டோ (ஜப்பான்), லின் யுன் ஜூ (சீனதைபே), டார்கோ ஜோர்ஜிக் (சுலோவேனியா) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

டேபிள் டென்னிசில் இந்தியாவில் நடக்க உள்ள மிகப்பெரிய தொடர் இது தான். உலகம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள் படையெடுப்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் இரு நாட்கள் தகுதி சுற்று நடைபெறும். 1-ம் திகதியில் இருந்து பிரதான சுற்று ஆரம்பமாகின்றது.

இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் தெரிவிக்கையில் ,

‘நம்ப முடியாத அளவுக்கு களம் வலுவாக இருப்பதால் ஒவ்வொரு ஆட்டமும் கடினமாக இருக்கப்போகின்றது.

நிறைய ரசிகர்கள் கோவாவுக்கு வருகை தந்து எங்களை உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

தேசிய சாம்பியனான ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீஜா அகுலா தெரிவிக்கையில்,

‘நான் விளையாடியதில் இது தான் நிச்சயம் மிகவும் வலுவான ஒற்றையர் பிரிவாக இருக்கும். இதற்கான பயிற்சி நல்ல விதமாக சென்று கொண்டிருக்கின்றது.

நெருக்கடியை தவிர்த்து ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவேன். கால்இறுதிக்கு முன்னேறுவதே எனது இலக்கு’ என்றார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஏப்ரலில் பேச்சு

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையில் ஏப்ரல் மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய ராஜாங்க அமைச்சர் முருகன் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நமது நாட்டில்(இந்தியா) வான்வழி, கடல்வழி, தரைவழி மேம்படுத்தும் வகையில் முன்னேற்பாடு குறித்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மீனவர்களை கைது செய்த போது மத்திய அரசு துரிதமாக செயற்பாட்டால் மீனவர்கள் மாத்திரம் விடுவிக்கப்படுகின்றனர் ஆனால் அவர்களது படகுகள் இலங்கை இராணுவத்ல்தா எடுத்துச் செல்லப்டுகின்றன.

இந்நிலையில், அவர்களின் படகுகளை மீட்கவும், இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படும் வகையிலும், ஏப்ரல் மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறினார்.

நாடளாவிய ரீதியில் நாளை(01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாளைய தின(01) ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் எரிபொருள், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம்(01) தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.

தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்காமை, வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமை போன்ற காரணிகளால், அண்மை நாட்களில் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு பாரிய தடை ஏற்பட்டிருந்தது.

தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்குமாயின் 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அச்சடிக்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையை சமூக பாதுகாப்பு பங்களிப்பில் இருந்து விடுவித்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு மேல் ஒரு கிலோ நாட்டு அரிசியை வாங்கும் போது, ஒரு கிலோ அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை தற்போதைய விலையில் பராமரிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தகவல்

பாணந்துறை – பின்வத்தை பொது மயானத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்க் கொல்லப்பட்டவர் கடவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வாகனத்தில் காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உயிரிழந்தவர் கடவத்தை, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சம்பத் குடகொட என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடவத்தை நகரில் உள்ள வெளிநாட்டு மதுபானக் கடை ஒன்றின் உரிமையாளர் அவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாணந்துறை பின்வத்தையில் வீடு ஒன்றை நிர்மாணித்து வருவதாகவும், நிர்மாணப் பணிகளுக்குச் செல்லும் போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண, பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Allianz Lanka உலகளாவிய NPS ஆய்வு 2022 இல் Loyalty Leader ஆக முதல் இடத்தில்

Allianz Lanka நிறுவனமானது அதன் சமீபத்திய Global NPS மதிப்பாய்வின் முடிவுகளின் அடிப்படையில்அதன் போட்டியாளர்கள் மத்தியில் Loyalty Leader நிலையை பெற்று சந்தையில் முன்னணியில் இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அனைத்து 5 வாடிக்கையாளர் பயணங்களிலும் Allianz நிறுவனமானது போட்டியாளர்களை மிஞ்சி சிறந்த வணிக இயக்கிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

NPS மதிப்பாய்வு என்பது Allianz குழுமம் அதன் அனைத்து OEக்களுடனும் இணைந்து அதன் வர்த்தக நாமத்தின் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள விசுவாசத்தை அளவிடுவதற்காக நடத்தப்படும் வருடாந்திர ஆய்வு ஆகும். விலை, வர்த்தக நாமம், சேவைத் தரம், தயாரிப்பு தரம் ஆகியவற்றோடு விற்பனை, புதுப்பித்தல், உரிமைகோரல்கள், தொடர்பு மற்றும் ஒப்பந்த மேலாண்மை போன்ற வாடிக்கையாளர் தொடர்பான அம்சங்கள் போன்ற வணிக இயக்கிகளை கருத்தில் கொண்டு, ஏதேனுமொரு காப்பீட்டு வர்த்தகநாமத்தைப் பரிந்துரைப்பதற்கான அவர்களின் விருப்பத்தைக் கண்டறிய, காப்பீட்டுக் கொள்கை வைத்திருப்பவர்களின் கருத்துகளின் ஆழமான நுண்ணறிவு மூலம் Net Promoter score (NPS) அளவிடப்படுகிறது.

இந்த சாதனையின் முக்கியத்துவத்தை Allianz Lanka வின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலன் ஸ்மி விளக்கும்போது, “வாடிக்கையாளரின் விசுவாசத்தை அளவிடுவதற்கும், எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிர்கால வணிக வளர்ச்சியைக் கணிப்பதற்கும் Net Promoter score (NPS) ஒரு முக்கியமான கருவியாகும். அதிக NPS மதிப்பெண் என்பது ஒரு வர்த்தக நாமத்தின் பலமாக இருப்பதோடு அதன் விசேஷித்த சேவைத் தரத்திற்கு ஒரு சான்றும் ஆகும். சிறந்த வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தமைக்காக எங்கள் ஊழியர்களுக்கும், எங்களை முதலிடத்தில் தரவரிசைப்படுத்தியதற்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 2023ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் இதே அளவிலான வாடிக்கையாளர் சேவை வழங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

Allianz Lanka வின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. மங்கள பண்டார கருத்து தெரிவிக்கையில், Allianz இன் வரலாற்றில் நாங்கள் இந்த நிலையை பெற்றுக்கொண்டது இதுவே முதல் தடவையாகும். இது எமது கடின உழைப்பின் பெறுபேறுகள் மற்றும் எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் நமது வலுவான வர்த்தக நாமத்தின் அங்கீகாரத்தை வெளிப்படுத்துகிறது. கோவிட்-தடுப்பு விழிப்புணர்வு திட்டங்கள், மனநலத் திட்டங்கள், எங்கள் வணிக வர்த்தகநாம பிரச்சாரம், புதுமையான கல்விசார் காணொளித் தொடர்கள், உரிமைக்கோரல்/onboarding ஆகியவற்றிற்கான டிஜிட்டல் செயலிகள் மற்றும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் CSR மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல முயற்சிகளை 2022 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எங்களது துறைகளும் குழுக்களும் முழுமூச்சுடன் செயல்பட்டன.

இந்த முயற்சிகள் எங்களது வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளன. எங்கள் வணிகப் பிரச்சாரத்தின் துவக்கம் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கான Simply Insurance காப்பீட்டு கல்வி காணொளித் தொடர்கள், கோரிக்கைகளுக்கான டிஜிட்டல் செயலிகளை உருவாக்குதல் போன்ற புதுமையான முயற்சிகள் இந்த வெற்றிக்கு வலுவாக பங்களித்துள்ளன என்று நான் நம்புகிறேன். Allianz Lanka என கூட்டாக அறியப்படும் Allianz Life Insurance Lanka Ltd. மற்றும் Allianz Insurance Lanka Ltd. ஆகியவை ஜெர்மனியின் Munich நகரைத் தலைமையிடமாகக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்களில் முதன்மையாகச் சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE க்கு முழுச் சொந்தமான துணை நிறுவனங்களாகும். Allianz குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமயமாக்கல் மற்றும் உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவை, Allianz Lanka வின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக இருக்கின்றது.

மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம்- விசேட குழு நியமனம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரைவேகத்தில் ஓரளவு பலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபித்தல்

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் இளைப்பாறிய காலத்தில் அனுகூலங்களுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும், இளைப்பாறிய ஊழியர்கள் நாட்டுக்கு சுமையின்றி தமது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கும் பொருத்தமான சூழலை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் எனும் பெயரிலான நிதியத்தைத் தாபிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர் ஒருவர் அரச சேவையில் இணைந்துகொண்ட பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் 8% வீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12% வீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு வைப்பிலிடுதல் வேண்டும். உத்தேச நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக முகாமைத்துவ சபையொன்றால் நிர்வகிக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்று தாபிக்கப்படுவதுடன், நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக விசேட தகைமைகளைக் கொண்ட நிதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய முறைமை எதிர்வரும் காலங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அரச ஊழியர்களுக்கு ஏற்புடையதாக அமைவதுடன், 2016 ஜனவரி மாதத்தின் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்ற ஓய்வூதிய முறைக்கு இயங்கியொழுகுதல் வேண்டுமென்ற ஏற்பாடுகள், அவர்களின் ஆட்சேர்ப்பு நியமனக் கடிதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தமது சுயவிருப்பின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய சம்பள முறையுடன் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கும் இயலும்.

அதற்கமைய, தேவையான ஏற்பாடுகளை இயற்றுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.