சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் பதிவாகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
அதன்படி கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம் இலங்கரத்ன இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான 2 மாடிகள் கொண்ட வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த 51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தது.
தாய் கழுத்து அறுப்பட்ட நிலையிலும், தந்தையின் உடல் எரியுண்ட நிலையிலும், மகளின் உடலை இடிபாடுகளுக்குள் இருந்தும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண், சிலாபம் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராகக் கடமையாற்றிவந்தவர் எனவும் அவரது கணவர் காணி விற்பனையில் ஈடுபட்டுவந்தவரெனவும் தெரியவந்துள்ளது.




