10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன.
அத்துடன் 8, 361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13, 421 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்படுவார்கள்.
அத்துடன் 2024 வாக்காளர் பட்டியலுக்கு அமைய, சில மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது.
இதற்கமைய, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.




