அரிசி ஆலைகளின் உரிமையாளர்களால், நாடு, சம்பா மாற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதாக சில பிரதேசங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நாடு அரிசியின் மொத்த விலை 255 ரூபாவாகவும், சம்பா அரிசியின் மொத்த விலை 260 ரூபாவாகவும், கீரி சம்பாவின் மொத்த விலை 275 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரிசி வகைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி நாடு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையாக 220 ரூபாவும், சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலையாக 230 ரூபாவும், கீரி சம்பாவுக்கான கட்டுப்பாட்டு விலையாக 260 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த கட்டுப்பாட்டு விலைகளை மீறி அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் மீண்டும் அரிசி வகைகளுக்கான விலைகளை ஏற்றி இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
புதிய விலைகளுக்கு அமைய, கொள்வனவு செய்யப்படுகின்ற அரிசியின் அளவுக்குப் பணத்தை வங்கியில் வைப்பு செய்யுமாறு அவர்கள் தங்களை அறிவுறுத்தி இருப்பதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவுவதாகக் கருதப்படும் அரிசி தட்டுப்பாட்டை நீக்குவதற்காக, 70,000 மெட்ரிக் டன் தொகைக்கு மேற்படாதவாறு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.
அதேநேரம் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இவ்வாறு இடைக்கிடையே விலைகளை அதிகரிப்பதன் காரணமாக, கட்டுப்பாட்டு விலைகளுக்கு அமைய அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.




