தேர்தலுக்கு முன்னர் கூறிய விடயங்களைப் புறக்கணித்து அரசாங்கம் தங்களது பாதீட்டை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைப்பதாகத் தெரிவித்த அரசாங்கம் தற்போது பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்..
வேதனம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அப்படி செய்ய முடியாது என நாங்கள் கூறினோம். இல்லை முடியும் என்றார்கள். குறைந்தபட்ச வேதனம், வாழ்க்கைச் செலவு இரண்டையும் சேர்த்தால் 57,500 ரூபாய் என நாங்கள் வெளியிட்ட கொள்கை பிரகடனத்தில் தெரிவித்திருந்தோம். அதற்கு 300 ரூபாயை சேர்த்து ஜனாதிபதி 57,800 ரூபாய் எனக் கூறுகிறார். பாதீட்டில் வேதனம் அதிகரிக்கப்படும் விதம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாங்கள் செப்டம்பர் மாதம் 57,500 ரூபாய் எனக் கூறிய போது அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறினார்கள். அதைவிட செய்ய முடியும் எனக் கூறினார்கள்.
அதை மூன்றாக பிரித்து கொடுக்கிறார்கள். 15,750 ரூபாயில் 8,250 ரூபாயே கிடைக்கும். மக்களுக்கு 15,000 ரூபாய் கணக்கை கூறிவிட்டு கிடைப்பது 8,000 ரூபாயே ஆகும்.அதிலும் ஏப்ரல் மாதம் குறைந்தபட்சம் 5,975 ரூபாய் கிடைக்கும். 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் 1,137 ரூபாய், 2027 ஆம் ஆண்டு 1,137 ரூபாய் கிடைக்கும்.இந்த வருடத்திற்கு 5,000 ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறினார்.




