நியூசிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் இணைய வேண்டியுள்ளமையினால் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிக் கட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை சமரி அத்தபத்து இழக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் யூ.பி.வொரியர்ஸ் அணிசார்பில் சமரி அத்தபத்து விளையாடிவருகிறார்.
காயம் காரணமாக அந்த அணியின் தலைவி அலிசா ஹீலி ஏற்கனவே விலகியுள்ள நிலையில், சமரி அத்தபத்துவின் விலகல் அந்த அணிக்கு மற்றுமொரு பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சமரி அத்தபத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அந்த அணிக்காக இன்னும் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அதன் பின்னர் தேசிய அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




