பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் சோதனை திட்டத்தை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயற்படுத்தின.
இந்த சோதனையில் சில சுவாரசியமான வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் பணியாளர்கள் தங்களின் வேலை நேரத்தை சராசரியாக அதிகரித்ததை அவதானிக்க முடிந்ததாகவும் Oxford மற்றும் Cambridge பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட Boston கல்லூரியை சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான ஜூலியட் ஷோர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தீக்காயம் ஏற்படல், தூக்கப் பிரச்சினைகள் என்பன பாரிய அளவில் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
4 நாட்கள் வேலைத் திட்டத்தின் சோதனையின் முடிவில், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை தொடரப் போவதாக அறிவித்துள்ளன.
கிட்டத்திட்ட 91% நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடரப்போவதாகவும், 4% நிறுவனங்கள் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளன.
மேலும், 4% நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தை தொடரப் போவதில்லை என தெரிவித்துள்ளன.
இந்த சோதனைக்கு சராசரியாக 10-க்கு 8.5 மதிப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. வணிக உற்பத்தித் திறன் மற்றும் வணிக செயல்திறன் பிரிவுகளுக்கு 7.5 சதவிகித மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டை இதே காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்களின் வருவாய் சுமார் 35 சதவிகிதம் அதிகரித்ததுடன் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.