இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாக போற்றப்படும் சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விசேட பூஜைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து போது, நாங்கள் இவ்வாறு எளிய முறையில் ஆடம்பரம் இல்லாமல் இன்று மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
வீண் செலவினங்களை குறைத்து இந்த தொழிலாளர் தினத்தை இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்நாட்டில் அரசு மக்களிடம் பொய்களை கூறி வாக்குகளை பெற்றது. இருப்பினும் கடந்த ஆறு மாத காலமாக எந்தவிதமான வேலை திட்டங்களும் மலையக மக்களுக்கு செய்யவில்லை.
குறிப்பாக சம்பள பேச்சுவார்த்தை விடயத்தில் 2,000 ரூபா பெற்று கொடுக்க வேண்டும் என சொல்லி சம்பள பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினார்கள். இன்று நான் பெற்றுக் கொடுத்த 1,700 ரூபா சம்பளமே இன்னும் காணப்படுகிறது.
ஆகவே, பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் மலையக மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுத்தும் இடத்தில் மலையக மக்கள் பிரதிநிதிகள் அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது கிடையாது. நாங்கள் பாரளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வீதியிலும் சரி எங்கள் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் குரல் கொடுப்போம்.
இன்று பெருந்தோட்டங்களில் சுயேட்சை கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது.




