மலையக மக்களின் பிரச்சினைகளை இந்திய பிரதமருக்கு எடுத்துச்சொல்ல அரச தரப்பில் உள்ள மலைய அமைச்சர்களுக்கு தகுதியில்லை என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று (01) பொகவந்தலாவை நகரப்பகுதியில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், அண்மையில் இலங்கை நாட்டுக்கு இந்திய பிரதமர் வருகை தந்திருந்த போது மலையக மக்கள் தொடர்பாக ஒன்றும் பேசப்படவில்லை அது இந்திய பிரதமரின் தவறில்லை.
சிலர் ஒரு கட்சிக்கு கொடி பிடித்துக்கொண்டு இருந்ததை அவதானித்தோம். அவர்கள் இன்று ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குரங்கு கையில் பூ மாலை கொடுத்தார் போல் இருக்கிறார்கள். 25 வயது பையன் நான் 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுத்தேன். தோழர் இன்று 1,700 ரூபா பெற்றுதருவதாக அறிவித்துள்ளார். அதனை நான் வரவேற்கிறேன், ஆனால் 1,360 ரூபா அடிப்படை சம்பளத்தை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுத்தால் எமது ஆதரவினை நாங்கள் வழங்குவோம்.
பத்து இலட்சம் மக்கள் தோட்ட தொழிலாளர்களின் அடையாளம். மக்கள் வைக்கின்ற கோரிக்கையினை பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியிடம் கொண்டு சேர்க்கின்றோம். மலையகத்திற்கு இன்று அங்கீகாரம் கிடையாது, நுவரெலியா மாவடத்திற்கு அந்தஸ்துள்ள அமைச்சு கிடையாது, அதையும் தாண்டி அளுமை கிடையாது வரலாறு தெரியாதவர்களுக்கு அடையாளத்தை காப்பாற்ற முடியாது.
ஜனாதிபதி அவர்களை நான் மதிக்கின்றேன். ஆனால் தலவாக்கலையில் வைத்து மலையக இளைஞர் யுவதிகள் தொடர்பில் அவர் பேசிய விடயங்களை எம்மால் எற்றுக்கொள்ள முடியாது. கஷ்டப்பட்டு உழைத்து அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியினை வழங்கும் மலையக மக்களை கோயில் கட்டி கொண்டாட வேண்டும். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. மலையகத்தை பொருத்தவரையில் சுயமரியாதை போராட்டம் அவசியம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று பல்வேறு துறையில் சாதித்து கொண்டு இருக்கிறார்கள்.
நாம் ஒரு சிறந்த உழைப்பாளர்கள், இந்த நாட்டில் உள்ள காடுகளை தோட்டமாக்கியதன் காரணமாகவேதான் இலவச கல்வி, இலவச சுகாதாரம் அனைத்தும் கிடைத்துள்ளது. மலையக மக்களுக்காக நான் குரல் கொடுத்தவன், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலுக்கு பிறகு நான் சென்று ஓடி ஒழியவில்லை அன்றும் இன்றும் என்றும் நான் ஜீவன் தொண்டமான்.
தொழிற்சங்க பிரச்சினை சம்பள பிரச்சினை ஆகியவற்றுக்கு நாங்கள்தான் குரல் கொடுக்கின்றோம். அடாவடி தனத்தை காட்டினால் எங்களுக்கும் அடாவடி தனத்தை காட்ட முடியும். மலையகத்தில் உள்ள ஏனைய கட்சிகளை நாம் வெறுக்கவேண்டிய அவசியமில்லை. அனைவரும் எம்மிடமிருந்து திருடி கொண்டு சென்றவர்கள். காங்கிரஸ் மக்கள் பக்கமே உள்ளது எவர் சார்பாகவும் ஆதரவு வழங்காது என குறிப்பிட்டார்.




