
கொழும்பு, ஜூலை 23 – 2022 ஜூலை 17ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முன்னாள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், அது தன்னிச்சையானதும் அதிகாரமற்றதும் என மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் பெரும்பான்மை தீர்மானித்துள்ளது.
இந்த தீர்ப்பை தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோத்தாகொட ஆகியோர் வழங்கினர்.
இந்நிலையில், அமர்வின் மற்றொரு உறுப்பினர் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, இந்த சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என தனிப்பட்ட கருத்தை வெளியிட்டார்.
மாற்றுக் கொள்கை மையம், முன்னாள் மனித உரிமைகள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன், மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த உரிமை மீறல் தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
உயர் நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்குக்கட்டணங்களை அரசாங்கம் ஏற்குமாறும் உத்தரவிட்டுள்ளது.






