ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் பஸ்களுக்கு புதிய விதிமுறை

ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களும் நாளை மார்ச் முதலாம் திகதி முதல் மாக்கும்புர பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்தின் (Makumbura Multimodal Centre) ஊடாக பயணிக்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹைலெவல் வீதியூடாக மாக்கும்புரவில் உள்ள பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக பஸ்கள் நிறுத்தி, பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்வதால், அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதியில் பயணிகளை நிறுத்துவது, இறக்குவது, பயணிகளை ஏற்றுவது ஆகியவற்றை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாககும்புர பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள ஹை-லெவல் வீதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை நிறுத்துவது, ஏற்றுவது அல்லது இறக்குவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இந்த விதி அனைத்து பஸ்களுக்கும் பொருந்தும். இது குறித்து புகார்கள் வந்தால், விசாரணையைத் தொடர்ந்து பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.