இஸ்ரேலில் நீதித்துறைக்கும், அரசாங்கத்துக்கு இடையிலான அதிகாரங்களில் சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருவதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக்கூறி அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருப்பினும் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இச்சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் சட்ட மசோதாவிற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இறுதியாக மசோதா நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அந்த மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.




