டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் முன்னாள் மத்திய சட்ட மந்திரியான கிரண் ரிஜிஜூவின் வீடு உள்ளது.
அவர், பிரதமர் மோடி மந்திரி சபையில் புவி அறிவியல் துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் அருணாசல பிரதேச மேற்கு தொகுதி எம்.பி.யாக அவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது வீட்டின் வாசலை ஒட்டிய பகுதியில் கார் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், அவரது வீட்டின் சுற்று சுவர் பகுதியில் பெரிய ஓட்டை விழுந்தது. காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.
வீடு மீது கார் மோதியதும், எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனடியாக பாதுகாவலர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் காரை ஓட்டி வந்த ரகீம் என்பவரை பிடித்து விசாரித்தனர். ரகீம் கூறும்போது, அவரும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அரியானாவில் உள்ள நூ நகரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தோம்.
வழியில், பஸ் ஒன்று எங்களின் கார் மீது மோதியது. இதனால், கார் சாலையை விட்டு விலகி மத்திய மந்திரியின் வீட்டு சுவரின் மீது மோதி நின்றது என கூறியுள்ளார்.




