போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த 2 உத்தரவுகளை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மாதம் ஜனவரி 22-ந் தேதி போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை ஐகோர்ட்டு 9-ந் தேதி அளித்த இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13-ந் தேதி வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது.
அதன்படி தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பஸ்கள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பஸ் முனையம் ஆகிய 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை.
இதனை மீறினால் சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலும், சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பஸ்கள் எக்காரணம் கொண்டும் 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், ரெட் பஸ் உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது.
இதனை மீறி செயல்படும் ஆம்னி பஸ் உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




