ஏப்ரலில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நீக்கப்படாது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஏப்ரல் 10ஆம் திகதி முதல் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக தேசிய எரிபொருள் விநியோக முறைமையின் கீழ் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் நிதியமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடைமுறை பற்றிய முடிவுகள் எடுக்கப்படும். அதனை விடுத்து கியூ.ஆர். குறியீட்டு முறைமை இரத்து செய்யப்பட மாட்டாது.