ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 300 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, புதிய சண்டிகரில் (பஞ்சாப்) உள்ள மஹாராஜா யதவிந்திர சிங் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 564/8 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது.
இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 113/5 ரன் எடுத்து, 451 ரன் பின்தங்கியிருந்தது. ரஹ்மத் ஷா (43) அவுட்டாகாமல் இருந்தார்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் 6 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடுமாறு, ஆப்கானிஸ்தானுக்கு ‘பாலோ-ஆன்’ கொடுக்கப்பட்டது.
வாஷிங்டன் அபாரம்
இரண்டாவது இன்னிங்சில் துவக்க வீரர் செடிகுல்லா அதிபட்சம் 42 ரன் எடுத்து, வாஷிங்டன் ‘சுழலில்’ போல்டானார். ரஹ்மானுல்லா (24), ரஹ்மத் ஷா (13) தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்னில் ஆல் அவுட்டானது. வாஷிங்டன் 4, குல்தீப் 3 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணி இன்னிங்ஸ், 300 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.




