Home Blog Page 33

இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் பெறச் செய்தது.

பின்னர் தொடர் யாருக்கு என்பது நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நேற்று இரவு (இந்திய நேரப்படி அதிகாலை) நடைபெற்றது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சால்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 28 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸல், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மொதியி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (3), சார்லஸ் (27), பூரன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ரூதர்போர்டு 30 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது.

 

3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன.

இந்த நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஹென்ரிக்ஸ்- ஜோர்ஜி ஜோடி நல்ல தொடக்க கொடுத்தது. ஹென்ரிக்ஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ஜோர்ஜி 81 ரன்னில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவரில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீ்ழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

துபாயில் நாளை ஐ.பி.எல். ஏலம்- அதிக விலைக்கு போவது யார்?

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இதேபோல டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர். குஜராத் டைட்டன்சை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஐ.பி.எல். போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஐ.பி.எல். ஏலம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஐ.பி.எல். ஏலப் பட்டிய லில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அசோசியேட் நாடுகளில் இருந்து 2 வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டவர்களுக்கான இடமாகும். 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூ.262.95 கோடியை கைவசம் வைத்துள்ளன.

பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள், விக்கெட் கீப்பர் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். 23 வீரர்க ளுக்கு அடிப்படை விலை யாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.1½ கோடியாகும்.

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போகப் போகும் வீரர் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்க், கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), கோயட்சி (தென்ஆப்பிரிக்கா), ஹசரங்கா (இலங்கை). ஹர்ஷல் படேல், ஷாருக்கான் (இந்தியா) ஆகியோர் மீது இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஃபைட் கிளப் திரை விமர்சனம்

உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து உறியடி 2ஆம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து விஜய் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஃபைட் கிளப். ஆதித்யா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தனது G Squad நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கிய ஃபைட் கிளப் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
சிறு வயதிலேயே கால்பந்து விளையாட்டில் பட்டையை கிளப்பும் கதாநாயகன் செல்வாவை [விஜய் குமார்] பெரிய கால்பந்து வீரனாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார் பெஞ்சமின்.

பெஞ்சமினுடைய தம்பி தான் ஜோசப். இவர் கிருபாகரன் என்பவருடன் இணைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்கிறார். இது பெஞ்சமினுக்கு தெரியவர முதலில் தனது தம்பியை எச்சரிக்கிறார். ஆனாலும் அதை கேட்காமல் கஞ்சா வியாபாரம் செய்கிறார் ஜோசப். ஒரு நாள் தனது தம்பியையும், கிருபாகரனையும் அடித்துவிடுகிறார் பெஞ்சமின்.

இதனால் தனது அண்ணன் என்றும் பார்க்காமல் கிருபாகரனுடன் இணைந்து பெஞ்சமினை கொலை செய்கிறார் ஜோசப். ஆனால், இந்த கொலையில் ஜோசப் போலீசிடம் சிக்கிக்கொள்ள கிருபாகரன் தப்பித்துவிடுகிறார். கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் சோசப் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்.

தன்னை ஒரே வாரத்தில் சிறையில் இருந்து ஜாமினில் எடுக்கிறேன் என கூறி 12 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருக்க வைத்த கிருபாகரனை பழிதீர்க்க வேண்டும் என முடிவு செய்கிறார் ஜோசப். இதற்கு பகடைக்காயாக கதாநாயகன் செல்வாவை பயன்படுத்திக்கொள்கிறார். இதனால் செல்வா சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
ஃபைட் கிளப் என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படமுழுக்க சண்டைகள் தான் நிறைந்து இருக்கிறது. ஒரு பக்கம் அது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட, அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது.

சசி என்பவர் எழுதிய கதையை வைத்து இயக்குனர் அப்பாஸ் எடுத்த முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். முழுக்க முழுக்க ஒரு ராவான ஆக்ஷன் படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆனால், படத்தில் சுவாரஸ்யம் இருந்ததா என்று கேட்டால், அது கேள்விக்குறி தான்.

சண்டை, போதை, பழி தீர்ப்பது இதுவே படம் முழுக்க இருப்பதால் படத்தின் மீது லேசாக சலிப்பு ஏற்படுகிறது. அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கூறியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சூப்பர்.

குறிப்பாக கதாநாயகன் விஜய்யின் செல்வா ரோல், அவினாஷின் சோசப் ரோல் மற்றும் கிருபாகரன் ரோல் மற்றும் இவர்களை சுற்றி இருக்கும் பசங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக அவினாஷ் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

மகாபாரதத்தில் வரும் சகுனியை போல் அவினாஷின் கதாபாத்திரத்தை பக்காவாக செதுக்கியுள்ளார் இயக்குனர் அப்பாஸ். ஆனால், எதற்காக இப்படத்தில் கதாநாயகி என்று தெரியவில்லை. அவருக்கு கொஞ்சம் கூட ஸ்கோப் கொடுக்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே அவர் வைத்திருந்தது போல் தெரிந்தது.

கமர்ஷியல் படங்களில் வருவது போல் இல்லாமல் நேரில் ஒரு சண்டை நடந்தால் எப்படி இருக்குமோ அதே போல் படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்த விக்கி மற்றும் அபூபக்கருக்கு பாராட்டுக்கள். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.

முக்கியமாக பல இடங்களில் பட்டையை கிளப்பியுள்ளது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. குறிப்பாக சண்டை காட்சிகளில் இவர் போட்டுள்ள பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. எடிட்டர் கிருபாகரன் உழைப்பு திரைக்கதையில் நன்றாக தெரிகிறது. திரைக்கதையை தனது எடிட்டிங் மூலம் அருமையாக காட்டியுள்ளார்.

இவை அனைத்தையும் தாண்டி வசனங்களுக்கு தனி பாராட்டு. ‘நான் பிறக்குறதுக்கு முன்னாடி ஆரம்பிச்ச சண்டை, நான் இறந்தாலும் நிக்காது’ என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது.

பிளஸ் பாயிண்ட்

விஜய் குமார், அவினாஷ் நடிப்பு

கோவிந்த் வசந்தா பின்னணி இசை

எடிட்டிங்

இயக்குனர் அப்பாஸின் ராவான ஆக்ஷன் மேக்கிங் அட்டெம்ப்ட்

மைனஸ் பாயிண்ட்

சண்டை காட்சிகள் ஒரு பக்கம் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட, அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது

படத்தில் கதாநாயகிக்கு கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லை

வெகுஜன மக்களை இப்படம் கவருமா என்பது கேள்விக்குறி தான்

மொத்தத்தில் வெறித்தனமான சண்டையோடு வெறுப்பேத்தியுள்ளது ஃபைட் கிளப்

டான்ஸ் ஆடும் போது கூட தினேஷை இன்சல்ட் செய்த மாயா – பாக்கவே பாவமா இருக்கு? இதோ வீடியோ

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10 வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

 

இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இந்த முறை இரண்டு வீடுகள் இருக்கிறது. மேலும், கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

 

பின் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அளவிற்கு செய்துவிட்டார்கள். இதனால் வீட்டிலேயே கலவரம் இடித்தது. பின் நேற்று நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கெட்டப் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார்.
தினேஷ்- படையப்பா ரஜினி
விசித்ரா- நீலாம்பரி
அர்ச்சனா- திமிரு பட வில்லி
பூர்ணிமா- பருத்திவீரன் முத்தழகு
விஷ்ணு- போக்கிரி விஜய்
மாயா- ஜீன்ஸ் வைஷ்ணவி

 

இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தார்கள். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். ஆனால், மாயா செய்தது தான் பயங்கர ஹைலைட் ஆக இருந்தது. மாயாவிற்கு ஜீன்ஸ் படத்தில் பரதநாட்டியம் ஆடும் வைஷ்ணவி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், மாயா பாடல் வரும் போதெல்லாம் பரதநாட்டியத்திற்கு பதில் குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

இதை சிலர் பாராட்டி இருந்தாலும் நெட்டிசன்கள் கிரிஞ்சியாக இருக்கிறது என்றும் பரதநாட்டியத்திற்கு இப்படியெல்லாம் குத்தாட்டம் போடுவதா? என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதே போல மாயா ஆடிக்கொண்டு இருக்கும் போது கடைசியில் அனைவரிடமும் ஆடினார். இதனால் தினேஷ் எழுந்து ஆட தயாரான போது அவருடன் மட்டும் ஆடாமல் அப்படியே சென்றுவிட்டு தினேஷுக்கு நோஸ் கட் கொடுத்துள்ளார்.

இரவு என்பதே இருக்காது! பேரழிவுகள் ஏற்படும்..பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள்

2024ஆம் ஆண்டில் உலகம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என்பது உட்பட பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் 2024ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் பரவின.

அதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது நாட்டைச் சேர்ந்தவர்களாலேயே கொல்லப்படுவார் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் 5079ஆம் ஆண்டு வரை என்ன சம்பவங்கள் நடைபெறும் என்று பாபா வாங்கா கணித்ததாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2024ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை உலகம் சந்திக்கும்.

புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உலகின் மிகப்பெரிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்யும் என்று பாபா வாங்கா கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் அடுத்த ஆண்டு பூகம்பம், வெள்ளம் என பேரழிவுகள் ஏற்படும் என்றும், 2028ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்திற்கு மனிதர்கள் செல்வார்கள் என்றும் அவர் கணித்து வைத்துள்ளாராம்.

அதேபோல் 2100 ஆண்டுக்கு பிறகு செயற்கை சூரியஒளி உருவாக்கப்பட்டு இரவு என்பதே பூமியில் இல்லாமல் போகுமாம்.

மேலும் 5079ஆம் ஆண்டுடன் ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடுமாம். பாபா வாங்கா ஆண்டுக்கு 6 கணிப்புகள் வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதி வைத்துள்ளாராம்.

கூகுள் தேடல் – கோலியும் இல்லை, ரோகித்-ம் இல்லை.. டாப் 10-இல் ஒரே இந்திய வீரர் யார் தெரியுமா?

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் கூகுள். உலகளவில் 2023 ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் அதிசயிக்கும் வகையில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது அசாத்திய ஃபார்ம் மூலம் இந்திய அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார்.

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் டாப் 10 பட்டியல்:

1 – டமர் ஹேம்லின்

2 – கிலியன் எம்பாப்பே

3 – டிராவிஸ் கெல்ஸ்

4 – ஜா மொரண்ட்

5 – ஹேரி கேன்

6 – நோவக் ஜோகோவிக்

7 – கார்லோஸ் அல்காரஸ்

8 – ரச்சின் ரவீந்திரா

9 – சுப்மன் கில்

10 – கைரி இர்விங்

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அளவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தெதுருஓயா, தப்போவ, வெஹேரலகல, லுணுகம்வேஹேர, மவ்ஆர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவில் பெய்த கடும் மழையினால், கெசெல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததில் பொகவந்தலாவின் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.

தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியா, நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஏழு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் டி காக், மார்கிராம், வான் டெர் டுசன், கிளாசன், மில்லர் வலு சேர்க்கின்றனர். டி காக் களத்தில் நின்று விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற இருப்பதால் அணிக்கு எதாவது செய்து விட்டு செல்ல வேண்டும் என நினைப்பார். டி காக் 4 சதங்களும், வான் டெர் டுசன் 2 சதமும், மார்கிராம், கிளாசன் தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.

பந்து வீச்சில் ரபாடா, யான்சன், நிகிடி என முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மகாராஜா, ஷாம்சி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையுடன் களம் காண்பார்கள்.

ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த பின், ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். லாபஸ்சேன், சுமித் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினால் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது கடினம். வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 சதங்களும், டிராவிஸ் ஹெட் ஒரு சதமும் அடித்துள்ளனர்.

பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் வேகப்பந்து வீச்சில் அசத்துவார்கள். புதுப்பந்தில் ஸ்டார் மாயாஜாலம் காட்டுவார். அதில் தென்ஆப்பிரிக்கா சிக்கினால் அவ்வளவுதான். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜாம்பாதான். இவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்வார்கள்.

இதனால் இரு பெரிய அணிகள் மோத இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை(17-ந்தேதி) தொடங்குகிறது.

இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது.

தொடர்ந்து சன்னிதானத்தில் புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டிமேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்படுகிறார்கள்.

பின்பு இரு மேல்சாந்திகளையும், படியிறங்கும் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி 18-ம் படிவழியாக சன்னிதானத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் இருவரையும் தந்திரி கலசாபிஷேகம் நடத்தி அபிஷேகம் செய்கிறார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்படும்.

நாளை(17-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமையேற்று நடத்துவார். அன்றைய தினம் முதல் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பிறகு மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

பக்தர்கள் வரும் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜைக்காக நாளை(17-ந்தேதி) முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை முதல் டிசம்பர் 27-ந்தேதி வரையிலான 41 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்திலும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவுபெறும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள மலைப்பாதையில் ஏராளமான இடங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.