நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி கடந்த ஜூலை 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (ஜூலை 25) உத்தரவிட்டார்.

இந்த மீனவர்கள், ஒரு இந்திய இழுவைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்காக மாற்றப்பட்டு, ஜூலை 13 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் விசாரணை நேற்று நடைபெற, மேலும் ஆகஸ்ட் 6 வரை அவர்கள் விளக்கமறியலில் தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஆண்டில் இதுவரை 185 தமிழக மீனவர்கள் மற்றும் 25 படகுகள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.